டெல்லி: ஈரானிடம் கச்சா எண்ணை இறக்குமதி செய்து கொள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த சலுகை முடிவடைந்த நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவீத் ஜரிப் டெல்லி வருகை தந்துள்ளார்.

அமெரிக்கா-ஈரான் நடுவே, மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில், முகமது ஜாவீத்தின் இந்திய, வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை விதித்திருந்தாலும், இந்தியா போன்ற நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணை இறக்குமதியில் சலுகை அளித்திருந்தது. ஆனால் அந்த சலுகையையும் நிறுத்திவிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

எண்ணை
பொருளாதார தடை
இதன் மூலம், ஈரானிடமிருந்து இந்தியா இனி கச்சா எண்ணையை இறக்குமதி செய்ய முடியாது. அப்படி செய்தால், அந்த நிறுவனங்களும் அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு உள்ளாகும். மேலும், வளைகுடாவிற்கு போர்க் கப்பல்களையும் அனுப்பியுள்ளார் ட்ரம்ப். இந்த நிலையில்தான், முகமது ஜாவீத் ஜரிப் இன்று, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சந்திப்பு
ஆலோசனை

அமெரிக்க பொருளாதார தடையை எதிர்கொண்டு இரு நாடுகள் நடுவே கச்சா எண்ணை வர்த்தகத்தை எப்படி தொடரலாம் என்பது பற்றி, அப்போது இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம், முகமது ஜாவீத் ஜரிப் இந்தியா வருகை தந்த நிலையில், இந்த ஆண்டில் அவர் இங்கு வருவது இரண்டாவது முறை.

ட்ரம்ப் அதிரடி
அமெரிக்கா நடவடிக்கை

2018ம் ஆண்டு மே மாதம், ஈரானுடனான, ‘இணைந்த விரிவான ஆக்ஷன் திட்டம்’ (JCPOA) ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்தது. இதன்பிறகு 6 மாதங்களுக்குள், அனைத்து நாடுகளும், ஈரானிடமிருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்வதை சுத்தமாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அறிவித்தது. பிறகு நவம்பர் மாதம், இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும், 6 மாத காலம், இந்த சலுகையை நீட்டிப்பு செய்தது அமெரிக்கா.

ஈரான்
நட்பு நாடு

முகமது ஜாவீத் ஜரிப் நேற்று, அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், பொருளாதாரம், அரசியல் மற்றும் பிராந்திய அளவில், ஈரானுக்கு இந்தியா முக்கியமான நட்பு நாடாகும். பல்வேறு விஷயங்கள் பற்றி நாங்கள் அவ்வப்போது இந்தியாவுடன் ஆலோசனை நடத்துவோம். தேவையில்லாமல் அமெரிக்கா நிலைமையை மோசமாக்கி வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.