ஐபிஎல் 12வது சீசனில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸை இறுதி போட்டியில் எதிர்கொண்ட சிஎஸ்கே, ஒரு ரன் வித்தியாசத்தில் தோற்று கோப்பையை இழந்தது.

2 ஆண்டுகால தடைக்கு பின் கடந்த ஆண்டு ஐபிஎல்லுக்கு திரும்பிய சிஎஸ்கே, கோப்பையை வென்று செம கம்பேக் கொடுத்தது. இந்த சீசனிலும் இறுதி போட்டிவரை முன்னேறி, வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து கோப்பையை இழந்தது.

சிஎஸ்கே அணியில் தோனி, ரெய்னா, ராயுடு, வாட்சன், பிராவோ, இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் என அணியின் பெரும்பாலான வீரர்கள் 35 வயதை கடந்தவர்கள். அதனால் வயதானவர்களின் அணி என்று கூட சிஎஸ்கே கிண்டலடிக்கப்பட்டது. ஆனாலும் அனுபவ வீரர்களை கொண்ட சிஎஸ்கே அணி, இந்த சீசனிலும் ஆதிக்கம் செலுத்தியது.

ஆனாலும் 35 வயதை கடந்த வீரர்கள் அணியில் அதிகம் இருப்பதால் அவர்களால் எஃபெக்டிவாக ஃபீல்டிங் செய்யவோ, பேட்டிங்கின்போது வேகமாக ரன் ஓடவோ முடியவில்லை. அதுவே சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாகவும் அமைந்தது. நேற்றைய போட்டியில் கூட, கடைசி ஓவரின் நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் ஓட முடியாததால் தான் வாட்சன் ரன் அவுட்டானார். அவர் அவுட்டாகவில்லை என்றால் சிஎஸ்கேவின் வெற்றி உறுதி.

எனவே அடுத்த சீசனில் அணியை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிஎஸ்கே. அதை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கும் உறுதிப்படுத்தியுள்ளார். அணி சீரமைப்பு குறித்து பேசிய ஃப்ளெமிங், எங்கள் அணி வயது அதிகமான வீரர்களை கொண்ட அணி என்பது தெரிந்ததுதான். எனவே அணி கண்டிப்பாக மீளுருவாக்கம் செய்யப்படும் என்று ஃப்ளெமிங் தெரிவித்தார்.