சிட்னி: ஆஸ்திரேலியாவில் திருடன் ஒருவன் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் முகமூடியை அணிந்துகொண்டு கடைகளில் கொள்ளையடித்த சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் குயின்லாந்து மாகாணத்தில் உள்ள ஸ்ட்ராத்பைன் எனும் இடத்தில் தான் இந்த திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், ஸ்ட்ராத்பைனில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலுக்குள் மர்ம மனிதன் ஒருவன், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் முகமூடியை அணிந்தபடி திருட்டுத்தனமாக நுழைந்தான்.

அந்த மாலில் உள்ள ஒரு நகைக்கடையின் வெளிப்புற கண்ணாடியை உடைத்து, அங்கிருக்கும் விலை உயர்ந்த வாட்ச்சுக்களை திருடினான். இதையடுத்து, ஒரு எலக்ட்ரானிக் கடைக்குள் நுழைந்து அங்கிருந்த சில விலை உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளான்.

அந்த மர்ம மனிதனின் செயல் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இருப்பினும் டிரம்பின் முகமூடியை அவன் அணிந்திருப்பதால், போலீசாரால் அவனை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

அமெரிக்க அதிபரின் முகமூடியை அணிந்து, திருட்டு செயலில் ஈடுபட்ட அந்த திருடனை பிடிக்க, ஆஸ்திரேலிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

எதனால் அந்நபர் டிரம்ப்பின் முகமூடியை அணிந்து கொண்டு, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டார் என்பது அவரைக் கைது செய்தால் மட்டுமே தெரிய வரும். ஆனாலும், இந்த வினோதமான திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.