சென்னை: திருவான்மியூரில் மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடிய சகோதரிகளில் சிறுமி ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவ மாணவிகள் வீட்டில் நேரத்தை கழித்து வருகின்றனர்.

வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு செல்கின்றனர். இதனால் குழந்தைகள் வீட்டில் டிவி பார்ப்பது வீடியோ கேம்ஸ் விளையாடுவது என்றும் வீட்டில் உடன் பிறந்தவர்கள் இருந்தால் அவர்களுடன் விளையாடுவது என்றும் இருந்து வருகின்றனர்

தஞ்சையை சேர்ந்த தம்பதி
இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் விடுமுறையில் வீட்டில் தனியாக இருந்த குழந்தைகள் விளையாடிய போது ஒரு சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள் திருப்பதிசாமி- புவனா தம்பதி.

2 பெண் குழந்தைகள்
இவர்கள் சென்னை திருவான்மியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ என்ற 8 வயது மகளும் சாருலதா என்ற 5 வயது மகளும் உள்ளனர்.

வேலைக்கு செல்லும் பெற்றோர்
தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். நேற்று கணவன் மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.

மரப்பெட்டி
இதனால் வீட்டில் இருந்த சிறுமிகள் வீட்டில் ஒளிந்து விளையாட முடிவு செய்தனர். அப்போது வீட்டின் மாடியில் இருந்த மரப்பெட்டிக்குள் ஒளிந்து விளையாடினர்.

பெட்டிக்குள் குழந்தைகள்
நேற்று மாலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் குழந்தைகளை காணாமல் தேடினர். அப்போது மாடியில் இருந்த பெட்டிக்குள் சத்தம் வந்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்து திறந்து பார்த்தனர்.

மரணம்
அப்போது 2 குழந்தைகளும் அரை மயக்கத்தில் வாந்தி எடுத்தனர். இதனைக் கண்ட பெற்றோர் குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் தனுஸ்ரீ என்ற 8 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமி சாருலதாவுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.