விண்ணில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டு ( ஏலியன் ஸ்பேஷிப்) குறித்து விசாரிக்க பல மில்லியன் டாலர் செலவிலான ரகசிய திட்டத்தை ‘பென்டகன்’ நடத்தி வந்ததாக அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒப்புக்கொண்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு தொடங்கிய இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒருசில அதிகாரிகள் மட்டுமே அறிந்திருந்தனர்.

நியூயார் டைம்ஸ் குறிப்பு:
விசித்திரமான அதிவேக விமானங்கள் பறப்பது மற்றும் விண்ணில் சில பொருட்கள் நகர்வதை இத்திட்டத்தின் ஆவணங்கள் விவரிப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது.

இதுகுறித்து சந்தேகத்தில் உள்ள விஞ்ஞானிகள், இது மாதிரியின விவரிக்க முடியாத சில இயல்புகள், வேற்றுகிரகவாசிகள் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை வலியுறுத்துகின்றனர்.
இந்த ஆய்வுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஓய்வுபெற்ற ஜனநாயக செனட்டர் ஹேரி ரீட். அவர் அப்போது செனட்டின் பெரும்பான்மை தலைவராக இருந்தார்.

20 மில்லியன் செலவு:
“நான் இத்திட்டத்தை நடத்தியதற்கு சங்கடமோ அல்லது வெட்கமோபடவில்லை. இதற்கு முன் யாரும் செய்யாததை நான் செய்துள்ளேன்” என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில் ஹேரி கூறியுள்ளார்.

இத்திட்டம் முடிக்கப்படுவதற்கு முன்னால், அமெரிக்க பாதுகாப்புத் துறை இதற்காக 20 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவழித்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளின் ஆய்வு:
இத்திட்டத்திற்காக செலவழிப்பது 2012 ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டாலும், அசாதாரண வான்வழி நிகழ்வுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான சில பொருட்களை பார்க்கும்போது அதுகுறித்து அவ்வப்போது அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

சீனா-ரஷ்யா வளர்ச்சி:
வெளிநாட்டு தொழில்நுட்ப வளர்ச்சிகள் குறித்து கண்காணிக்க இத்திட்டம் செயல்படுத்தபட்டிருக்கலாம் என முன்னாள் காங்கிரஸ் ஊழியர் ஒருவர் பொலிட்டிக்கோ செய்தி ஊடகத்திடம் தெரிவித்தார்.

“சீனா அல்லது ரஷியா ஏதேனும் செய்ய முயற்சிக்கிறார்களா அல்லது நமக்கு தெரியாத எதாவது உந்துதல் அமைப்பின் செயலா?” என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இணையத்தில் வெளியானது:
முன்னதாக இந்த ஆண்டில், அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு, லட்சக்கணக்கான ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டது.

விண்ணில், அடையாளம் தெரியாத பொருட்கள் மற்றும் பறக்கும் வட்டத்தட்டுகளை கண்டது குறித்த ஆவணங்களும் இதில் அடங்கும். இதுகுறித்து இணையதளத்திலும் வைரலாக பரவி வருகின்றது.