நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்துள்ளார்.
சென்னை: சபாநாயகர் மீதான திமுகவின் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். திமுகவுக்கு இப்போதுதான் முதல் முறையாக ஒரு விஷயத்தில் கமல் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பதால் இது கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாச்சலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி என்று இந்த 3 அதிமுக எம்எல்ஏக்களும், அமமுகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டு வருவதாக ஒரு புகார் சபாநாயகரிடம் தரப்பட்டது.

இதனால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ 3 பேருக்கும் சபாநாயகர் தனபால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 3 பேர் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதால் விஷயம் சீரியஸ் ஆனது!

நோட்டீஸ்
சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய உடனேயே சூட்டோடு சூட்டாக திமுக தரப்பில் சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர மனு ஒன்று தரப்பட்டது.

அரிதான விஷயம்
சபாநாயகர் என்பவர் எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் பொதுவானவர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிகளுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானங்கள் அவ்வப்போது கொண்டு வரப்படும் என்பது நடந்துள்ள சமாச்சாரம்தான் என்றாலும், ஒரு சபாநாயகர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது ரொம்பவும் அரிதான விஷயம்.

கமல் நிலைப்பாடு
தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகரை செயல்பட விடாமல் தடுக்கும் வகையில் திமுக இப்படி ஒரு மனுவை கொடுத்துள்ளதால், அரசியல் களம் தகித்து உள்ளது. இந்நிலையில்தான், கமல்ஹாசன் திமுகவுக்கு ஆதரவு தந்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

காரசார விமர்சனம்
ஸ்டாலின் மீது கமலும், கமல் மீது ஸ்டாலினும் ஒருவருக்கொருவர் வெறுப்பை உமிழ்ந்து காரசார விவாதங்களை செய்து கொண்டனர்… அளவுக்கு அதிகமாகவே விமர்சனம் செய்து கொண்டனர்! ஆனால் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், சபாநாயகர் மீது திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார்.

3 எம்எல்ஏக்கள்
“3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது அதிமுக உட்கட்சி பூசல் விவகாரம் என்றாலும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொணடு வரலாம்” என்றார்.

நம்பிக்கை தரும்
இதன்மூலம் திமுக பக்கம் கமல் சாய தொடங்கி உள்ளார் என்று எடுத்து கொள்வதா, அல்லது அதிமுகவை கவிழ்க்க யாருடன் வேண்டுமானாலும் இணைந்து தனது ஆதரவை தர கமல் முன் வந்துள்ளார் என்று எடுத்து கொள்வதா என தெரியவில்லை. கமல்ஹாசனுக்கு சட்டசபையில் பலம் இல்லை என்றாலும் கூட அவரது தார்மீக ஆதரவு திமுக தரப்புக்கு நம்பிக்கை அளிக்க உதவும் என்பதால் இது முக்கியமானதாக கருதப்படுகிறது.