இனி யாரும் அஞ்ச தேவை இல்லை கிம் சந்திப்புக்கு பின் டிரம்ப்பின் முதல் ட்வீட்

வடகொரியாவிடம் இருந்து அமெரிக்காவுக்கு வந்த ஏவுகணை மிரட்டல்கள் இனி இருக்காது, நிம்மதியாக தூங்குங்கள் என கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பின், தனது முதல் ட்வீட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்நோக்கியிருந்த டிரம்ப்-கிம் ஜாங் உன் சந்திப்பு நேற்று சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், அமெரிக்காவுக்கு திரும்பினார். இன்று மாலை அமெரிக்காவின் வாஷிங்டனில் தரையிறங்கிய டிரம்ப், தனது ட்விட்டர் பக்கத்தில் கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ‘ஒரு நீண்ட பயணத்திற்கு பின்னர் சற்று நேரத்திற்கு முன்னதாக தரையிறங்கினேன். ஆனால், நான் பதவியேற்ற நாளை விட தற்போது அனைவரும் பாதுகாப்பை உணர்வார்கள். இனி வடகொரியாவிடம் இருந்து எந்த அணு ஆயுத அச்சுறுத்தலும் இருக்காது.

கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு சிறந்த அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. நான் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன், வடகொரியா உடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர்.

வடகொரியா நமது மிகப்பெரிய அச்சுறுத்தல் என ஒபாமா கூறியிருந்தார். இனி எதுவும் இல்லை. இன்று நன்றாக தூங்குங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Subscribe to YouTube Channel